சந்தவுலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மெஹ்தாப். அவருக்கு டிசம்பர் 22-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது, அன்று மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மணமகனின் உறவினர்களுக்கு ரொட்டி வழங்க மணமகளின் குடும்பத்தினர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் சண்டையிட்டனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் விரக்தியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டு உறவினரை திருமணம் செய்து கொண்டார். இதை பார்த்த மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
மணமகனுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.1.5 லட்சம் உட்பட திருமணத்திற்கு செலவு செய்த ரூ.7 லட்சத்தை மணமகன் வீட்டார் திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, 5 பேர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். வரதட்சணை தடைச் சட்டம் 1961-ன் படி, வரதட்சணை கொடுப்பவர்கள், பெறுபவர்கள் அல்லது உதவுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.