பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவின் வலிமையை உலகமே கண்டதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையும், மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளையும் இன்று அவர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஆப்பரேஷன் சிந்தூர் இந்திய படைகளின் வெற்றியையும், எல்லைக்கு அப்பால் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் திறனையும் உலகுக்கு நிரூபித்தது என்றார். மேலும், சில மணி நேரங்களில் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது புதிய இந்தியாவின் ஆற்றல் எனக் கூறினார்.

பெங்களூரு, புதிய இந்தியாவின் அடையாளமாக வளர்ந்து வருவதாகவும், உலகளவில் தொழில்நுட்பத் துறையில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய இதன் பங்கும் மக்களின் உழைப்பும் முக்கியம் என்றும் அவர் பாராட்டினார். நாட்டின் முன்னேற்றத்திற்கு மறுசீரமைப்பு, செயல்திறன் மற்றும் மாற்றமே காரணம் என விளக்கினார். 2014ல் வெறும் ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவை இருந்த நிலையில், தற்போது 24 நகரங்களில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகம் விரிவடைந்துள்ளது என தெரிவித்தார்.
அதேபோல், 2014க்கு முன் ரயில்பாதை மின்மயமாக்கல் 20,000 கிலோமீட்டரே இருந்தது. கடந்த 11 ஆண்டுகளில் இது 40,000 கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. விமான நிலைய எண்ணிக்கை 74இல் இருந்து 160க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நீர்வழி போக்குவரத்து வழித்தடங்களும் 3இல் இருந்து 30ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். இவை அனைத்தும் தெளிவான திட்டமிடலாலும் நேர்மையான செயல்பாடுகளாலும் சாத்தியமானவை என்று வலியுறுத்தினார்.
இந்த முன்னேற்றங்கள், புதிய இந்தியா உலக அரங்கில் வலிமையாக நிற்பதற்கான அடித்தளமாக அமைகின்றன என பிரதமர் மோடி கூறினார். இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விரைவில் உயர்ந்திடும் பாதையில் இருப்பதை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பெங்களூருவின் சாதனைகள், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.