புதுச்சேரி ராஜீவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்பட்டு, அதன் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று (மார்ச் 3) கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு எம்ஆர்ஐ கருவியை இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் துறை தலைவர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். அதன்போது அவர், புதுச்சேரியில் மொத்தம் 9 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவில் இதுபோன்ற சிறப்பான மருத்துவ வசதிகள் வேறு எங்கும் இல்லாத நிலையில், புதுவையை மருத்துவ சுற்றுலா மையமாக உருவாக்க ஏதுவாக மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரி ஏற்கனவே சுற்றுலா நகரமாக இருப்பதால், அதனை உலகளவிய மருத்துவச் சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக மருத்துவ சேவைகளை ஒருங்கிணைத்து புதுவையை ஒரு சிறந்த மருத்துவக் கேந்திரமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அகமதாபாத்தில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பலர் சிகிச்சைக்காக வருவதை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகையில், புதுச்சேரியும் அதேபோன்று மருத்துவமுறையில் சிறப்பிடம் பெறக் கூடும் என்றார். பிரெஞ்சு கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டுள்ள புதுச்சேரி, பிரெஞ்சு ரீயூனியன் நாடுகளுடன் இணைந்து மருத்துவச் சேவைகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஆலோசனை மற்றும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக உருவாக்க வேண்டும் என்றும், அதற்கான தேவைகளை உடனடியாக அறிந்து, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் மருத்துவ துறையில் பணியாற்றும் அனைவரும் இந்த நோக்கத்திற்காக இணைந்து செயல்பட வேண்டும் என துணைநிலை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.