மைசூர்: 10 நாட்கள் நடந்த மைசூர் தசரா திருவிழாவை, 1.6 லட்சம் பேர் கண்டுகளித்து, 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மைசூரில் தசராவின் 10 நாட்களில், நகரின் ஒவ்வொரு மூலையிலும் ஏதோ நடக்கிறது.
பஸ், ரயில், விமானம், கார், பைக் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் மைசூருக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இம்முறை தசரா பண்டிகை தொடங்கும் முன், முக்கிய சுற்றுலா தலங்களை விளம்பரப்படுத்த, நாட்டின் பிரபல சமூக வலைதள பிரமுகர்கள், மைசூருக்கு அழைத்து வரப்பட்டனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டனர். நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பலர் மைசூர் மீது படையெடுத்தனர். அக்டோபர் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடந்த தசரா திருவிழாவை 16 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்; 20 சதவீதம் பேர் பிற பகுதிகளில் இருந்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓட்டல்கள், சுற்றுலாத்துறை, உணவகங்கள் என அனைத்து தரப்பினருக்கும் மொத்தம் 500 கோடி வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டல் துறையில் மட்டும் 110 கோடி வர்த்தகம் நடந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.