அயோத்தி: ‘ராம நவமி’யை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் உள்ள குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி திலகமாக படர்ந்தது. ராம நவமி அன்று சரியாக மதியம் 12 மணிக்கு சூரிய திலக தரிசனம் நடைபெறுகிறது. அந்த நேரத்தில், சூரிய ஒளியின் கதிர்கள் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் துல்லியமாக செலுத்தப்பட்டு, தெய்வீக முறையில் ஒரு திலகம் வடிவத்தில் பரவுகின்றன.
அப்போது, ராமர் கோயில் அர்ச்சகர்கள் குழந்தை ராமருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். ராமர் கோவிலில் அறிவியல் முறையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் மூலம் இணைக்கப்பட்ட விரிவான அமைப்பின் மூலம் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சுமார் மூன்று நிமிடங்களுக்கு சூரிய ஒளி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோவிலில் ராம நவமி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குழந்தை ராமருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.