புதுடில்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்ட திருத்தம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் தனது இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. 70க்கும் மேற்பட்ட மனுக்களை விசாரித்த பிறகு, முழு சட்டத்தையும் நிறுத்துவதற்கு தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் சில முக்கிய பிரிவுகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சிங்வி உள்ளிட்டோர் வலுவான வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில், சொத்து வழங்கும் நிபந்தனை மற்றும் மதம் தொடர்பான சில விதிகளில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
குறிப்பாக, வக்ப் வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் விதிகள் மாநில அரசு கொண்டு வரும் வரை, இந்நிபந்தனை அமல்படுத்தப்படக்கூடாது எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். அதே நேரத்தில், வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர் எண்ணிக்கை மூன்றுக்கும் மேல் இருக்கக்கூடாது என்ற பிரிவு தொடரும் எனவும் தெரிவித்தனர்.
அதிகாரப் பிரிவினையை மீறக்கூடிய வகையில், தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகள் கலெக்டர் மூலம் தீர்மானிக்கப்படக்கூடாது என்றும், தீர்ப்பாயம் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. இதனால், வக்ப் சட்ட திருத்தம் முழுமையாக தடை செய்யப்படாத நிலையில், சில சர்ச்சைக்குரிய பிரிவுகள் மீது தற்காலிக தடையே விதிக்கப்பட்டுள்ளது.