புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அன்றாடப் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றமே வழக்கு பதிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று மதியம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி உச்ச நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஆர்.ஜி.கார் மருத்துவமனை நிர்வாகம், மேற்கு வங்க அரசின் செயல்பாடுகள் மற்றும் மாநில காவல்துறையின் முதல் கட்ட விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தும். . பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கும்.
மருத்துவர்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் அசோகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் போராடி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சொந்த மகளை இழந்து தவிக்கிறது. பெண் மருத்துவரின் மரணத்தைத் தடுக்கத் தவறிவிட்டோம். எனினும், அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க நாம் தவறக்கூடாது. இதில், ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நீதி கேட்க வேண்டும்’ என்றார்.
பெண் டாக்டரின் தாய் வேதனை: கொல்லப்பட்ட பெண் டாக்டரின் தாய் கூறியதாவது: எனது மகள் கடினமாக படித்து ஜேஇஇ, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தார். எம்பிபிஎஸ் முடித்த பிறகு, முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். அவருக்கு 2 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. வீட்டுக்கு அருகாமையில் இருந்ததால் ஆர்.ஜி.கார் மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார். மருத்துவமனையைத் தன் வீடாகக் கருதினார். ஓய்வெடுக்க நேரமில்லாமல் கடுமையாக உழைத்தார். அசுரர்களின் கொடூர செயலால் ஒரே மகளை இழந்து தவித்து வருகிறோம். நாங்கள் ஏழைகள். இருப்பினும், எங்களுக்கு எந்த நிதி உதவியும் தேவையில்லை. எங்கள் அப்பாவி மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.