ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கடந்த வாரம் புனேவில் பேசுகையில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, கோவில்-மசூதி தொடர்பாக புதிய பிரச்சினைகளுக்கு இடமில்லை. சிலர் முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்பி இந்துக்களின் தலைவர்களாக முயற்சிப்பதை ஏற்க முடியாது. ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தை சமாஜ்வாடி முஸ்லிம் எம்பிக்களும் சில முஸ்லிம் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
அதே சமயம் சில இந்து சங்கராச்சாரியார்களும், துறவிகளும், மடாதிபதிகள் எதிர்த்துள்ளனர். இது குறித்து அகில பாரதிய சங்கத்தின் பொதுச்செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறுகையில், ”இந்த பிரச்னையில் இருந்து பகவத்ஜி ஒதுங்கி இருப்பது நல்லது. மதத் தலைவர்கள் மட்டுமே இதுபோன்ற மத விஷயங்களை எடுத்துக் கொள்ள முடியும். ஆர்எஸ்எஸ் போன்ற கலாச்சார அமைப்புகள் அல்ல.
ஜோதி பீடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் கூறுகையில், “இந்துக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதற்கு வருந்துகிறார்கள், அவற்றில் பிரார்த்தனை செய்கிறார்கள். முஸ்லீம்களும் தங்கள் முன்னோர்கள் இப்படி அராஜகம் செய்தார்களா என்று வியக்கிறார்கள். இந்த நிலையில் அரசியல் சூழலுக்கு ஏற்ப இவ்வாறான கருத்தை வெளியிடக் கூடாது” என்றார்.
அயோத்தி அகில பாரதிய வியாஸ் சங்கத்தைச் சேர்ந்த சுவாமி பாலக்தாஸ், “ஆர்எஸ்எஸ் தலைவரான நீங்கள் இந்த விஷயங்களில் இந்துக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் இந்த வேலையைச் செய்ய விடாமல் ஏன் தடுக்கிறீர்கள்? இதற்காக நீங்கள் உங்கள் மன உறுதியை இழந்திருக்கலாம், ஆனால் இந்துக்கள் அதை இன்னும் இழக்கவில்லை,” என்றார். இதேபோல், அயோத்தி ராமர் கோயில் தலைவர் பண்டிட் சத்யேந்தர் தாஸ், அயோத்தி ஹனுமான் கோயில் முதல்வர் பண்டிட் மக்ந்த் ராஜு தாஸ், துளசி பீடாதீஷ்வர் ஜகத்குரு ராம் பத்ராச்சார்யா மற்றும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக மவுனம் சாதிக்கிறது. இதேவேளை, முஸ்லிம் பிரதேசங்களில் பல வருடங்களாக மூடப்பட்டிருந்த ஆலயங்கள் மீண்டும் திறக்கப்படுவது தொடர்கிறது. உ.பி.,யில், சம்பல் நகருக்கு அடுத்தபடியாக, முசாபர்நகர், வாரணாசி, அலிகர், கான்பூர், ஜோன்பூர், அமேதி என பட்டியல் நீள்கிறது.