திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் (7). இவர் கோடை விடுமுறை பயிற்சிக்காக சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது, பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன், 15 மாணவர்கள் காயமடைந்தனர். பவன் கல்யாணின் மகனுக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மகனின் 2 நாள் சிகிச்சைக்குப் பிறகு சிங்கப்பூர் சென்ற பவன் கல்யாண், தனது மகனையும் மனைவி அன்னா லெஷ்னேவாவையும் ஹைதராபாத் அழைத்து வந்தார். இந்நிலையில் அன்ன லெஷ்னேவா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். மகன் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்ததால், தலைமுடியை மொட்டையடித்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினார்.
இதையடுத்து இன்று காலை ஏழுமலையானை வழிபட்டு தனது விருப்பத்தை நிறைவேற்ற உள்ளார். அன்னா லெஷ்னேவா, ஒரு கிறிஸ்தவராக இருந்து, இந்து மதத்தில் தனது நம்பிக்கையை அறிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் மற்றும் ஏழு மலைகளுக்கு தனது தலைமுடியை காணிக்கையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.