சென்னை: விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை. உலகளவில் பல நாட்டு பெண்களும் அணிய விருப்பப்படும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன.
பட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்கு அணிந்து செல்லும் போது அங்கிருக்கும் இறை சக்தியை நம் உள்வாங்கி தருகிறதாம். அதன் காரணமாய் ஆலயம் செல்லும்போது அவசியம் பட்டு சேலை கட்டி வருகின்றனர். அதுபோல் பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது.
பட்டு சேலைகள் நெய்யப்படும் ஊர்களை வைத்துதான் அதிகமாய் பிரபலமாகின்றன. காஞ்சீபுரம், ஆரணி, தர்மாவரம், திருபுவனம் போன்ற தமிழக பகுதிகளும், பனாரஸ் போன்ற வெளி மாநிலத்தில் பல நகரங்களின் பெயர்களிலும் பட்டு சேலைகள் அழைக்கப்படுகிறது. அந்தந்த ஊரில் நெய்யப்படும் கைதிறன் அடிப்படையில் அவை தனிச்சிறப்பு சேலையாக உலக பிரசித்தி பெற்றுள்ளன.
உலகளவில் சீனாவிற்கு அடுத்தப்படியாய் இந்தியாவில் தான் பட்டு துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகளுக்கான பட்டு நூலில் நான்கு வகைகள் உள்ளன. அதாவது, மல்பரி, டஸ்ஸர், எரி, முகா போன்றவை.
மங்கையர் மணங்கவரும் பட்டு நூல் வகையில் உலகளவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவது மல்பரி பட்டு தான். அதாவது உலகின் மொத்த பட்டு உற்பத்தியில் 90 சதவீதம் மல்பரி பட்டு வகைதான் பயன்படுத்தப்படுகிறது.
மல்பரி வகை பட்டுப்புழுக்களில் இருந்து இந்த வகை பட்டு நூல் தயாரிக்கப்படுவதால் இதற்கு மல்பரி பட்டு எனப்பெயர். மல்பரி பட்டு நூல் வழவழப்பும், உறுதியும் கொண்டது. மல்பரி பட்டு நூலில் சாயங்கள் ஏற்றுவதும், விரும்பிய டிசைனை உருவாக்குவதும் சுலபமாக உள்ளன. அதிக உற்பத்தி, பயன்படுத்த லகுவான பட்டு நூல் என்பதால் மல்பரி பட்டு முதலிடம் பிடிக்கிறது.