திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், சில நாட்களுக்கு முன் லட்டு பிரசாதம் தயாரித்து கொண்டிருந்த மடப்பள்ளி ஊழியர்களை அழைத்து விசாரித்தார்.
லட்டுவில் சேர்க்க வேண்டிய பொருட்களை பெற்று ஆய்வு செய்தார். லட்டு பிரசாதத்திற்கு டெண்டர் எடுத்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்குவது தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வழங்க ஆர்டர் செய்யப்பட்டது. இதுவரை 68 ஆயிரம் கிலோ நெய்யை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. அதிகாரி சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 20,000 கிலோ நெய் மிகவும் தரக்குறைவாக அனுப்பப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. தேவஸ்தானத்திற்கு தரமான நெய் அனுப்ப 5 நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன.
ஏஆர் பால் நிறுவனம் அனுப்பிய 20,000 கிலோ நெய்யில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மீது விரைவில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்தார்.