புதுடில்லி: நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் 1947 ஆகஸ்ட் 14-ஆம் தேதி பிரிக்கப்பட்டபோது ஏற்பட்ட வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்களால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த துயரமான வரலாற்றை நினைவுகூரும் வகையில், மத்திய அரசு ஆகஸ்ட் 14-ஆம் தேதியை ‘பிரிவினை கொடுமையின் நினைவு தினம்’ எனக் கடைப்பிடித்து வருகிறது. இதன் மூலம் தேச ஒற்றுமையும் சமூக நல்லிணக்கமும் வலியுறுத்தப்படுகின்றன.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி, அந்த காலத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த துயரங்களையும், மன உறுதியையும் நினைவுகூரும் நாளாக இது அமைகிறது என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நாள், நமது நாட்டை ஒன்றிணைக்கும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான நமது பொறுப்பை நினைவூட்டுவதாக பிரதமர் மோடி வலியுறுத்தினார். இது, வருங்கால சந்ததிகளுக்கு ஒற்றுமையும் அமைதியும் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் பாதையை காட்டும் நிகழ்வாகவும் அவர் கூறினார்.