சென்னை: பொறியியல் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் முடிந்துள்ள நிலையில், பொதுப்பிரிவுக்கான கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளுக்கு 1.79 லட்சம் இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் மூலம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியிடப்பட்டது.மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 22ம் தேதி தொடங்கியது.
முதற்கட்டமாக, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களின் குழந்தைகள் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27 வரை நடைபெற்றது.
சிறப்புப் பிரிவில் மொத்தமுள்ள 9,639 இடங்களில் 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 92 இடங்கள் நிரப்பப்பட்டன. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது.இதில், 26,654 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இது பற்றிய கூடுதல் தகவல்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் காணலாம். மூன்று கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 3ம் தேதி நிறைவடைகிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெறும்.