புது டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் இன்று காலை அடர்ந்த மூடுபனி காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, 45 ரயில்கள் தாமதமாகியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களாக வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. குளிர்காலம் என்பதால், இமயமலையை ஒட்டிய பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
பல வடக்கு மாவட்டங்களிலும் குளிர் அதிகரித்துள்ளது. தலைநகரான டெல்லி கடந்த பல மாதங்களாக காற்று மாசுபாடு பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், தற்போதைய பனிப்பொழிவு முன்னால் தெளிவாகப் பார்ப்பதை கடினமாக்கியுள்ளது. டெல்லியின் சஃப்தர்ஜங் சாலை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை குறைந்தது 50 மீட்டர் தூரம் காண முடியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரம் செல்லச் செல்ல தெரிவுநிலை தூரம் சற்று அதிகரித்து காலை 7.30 மணிக்கு 200 மீட்டராக உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், டெல்லியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அடர்ந்த பனி மற்றும் மாசுபாடு காரணமாக 45 ரயில்கள் தாமதமாக வந்ததாக ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 15 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காலை 8.30 மணிக்கு ஈரப்பதம் 100 சதவீதமாக இருந்தது.