வாஷிங்டன்: “ரஷ்யா–உக்ரைன் போரில் இந்தியாவின் தொடர்பு இருப்பதால், இது பிரதமர் நரேந்திர மோடியின் போர் என்றே சொல்ல வேண்டும்,” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதை தண்டிக்கும் நோக்கில் 50 சதவீத வரி விதிப்பதாக அவர் கூறினார். இந்தியா அந்த இறக்குமதியை நிறுத்தினால், 25 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அவரின் கூற்றுப்படி, ரஷ்யா – உக்ரைன் போருக்கான நிதி ஆதாரம் இந்தியா வழங்கும் எண்ணெய் வர்த்தகத்திலிருந்தே உருவாகிறது. அதனால், “இந்தப் போர் ரஷ்யாவின் மட்டும் அல்ல, மோடியின் போரும் கூட” என அவர் கடுமையாக சாடினார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை கடுமையாக பதிலளித்துள்ளது. “140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்புதான் எங்களுக்கு முன்னுரிமை. எரிபொருள் கொள்முதல் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. சீனாவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எரிபொருளை வாங்கும் நிலையில், இந்தியாவையே குறிவைப்பது ஏன்?” என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம், ஏற்கனவே இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருநாடுகளுக்கிடையே அடுத்த கட்ட தூதரக பேச்சுவார்த்தைகள் எவ்வாறு அமையும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.