புதுடில்லி: கடந்த சில மாதங்களாக இந்தியா குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி “மோடி எப்போதும் என் நண்பர்” என்று கூறியுள்ளார். இதற்கு பிரதமர் மோடி, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவதாகவும், இந்தியா-அமெரிக்கா உறவு நேர்மறையான பாதையில் தொடரும் எனவும் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்த டிரம்ப், அதை 50 சதவீதமாக உயர்த்தியிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மோடியின் அழைப்பை அவர் புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், மோடி, புடின் மற்றும் ஜின்பிங்குடன் பேசியது உலக அரசியலில் கவனத்தை ஈர்த்தது.
இந்த சூழலில், அமெரிக்க செய்தியாளர்கள் இந்தியா-அமெரிக்க உறவை மீட்டெடுப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, டிரம்ப் “நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் சில தருணங்களில் அவரின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை” என பதிலளித்தார். இருப்பினும், இரு நாடுகளின் உறவு வலுவாகவே தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, டிரம்பின் நேர்மறையான பார்வையை பாராட்டியதுடன், இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டாண்மை உலகளாவிய முன்னேற்றத்துக்கானது எனக் குறிப்பிட்டார். ஆனால், ‘நண்பர்’ என்ற சொல்லை மோடி பயன்படுத்தாதது கவனத்தை பெற்றது. அதே நேரத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுடனான உறவை பிரதமர் மோடி மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்த்து வருகிறார் எனக் கூறினார். இந்நிலையில், இரு நாடுகளின் உறவு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்கிறது.