பாட்னா: பீஹார் துணை முதல்வருக்கு இரண்டு வாக்காளர் அட்டைகள் இருப்பது எப்படி என எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனை எதிர்க்கட்சிகள் முறைகேடு என குற்றம்சாட்டி வருகின்றன. தன்னுடைய பெயர் பட்டியலில் இல்லை என தேஜஸ்வி புகார் செய்தபோது, தேர்தல் ஆணையம் அவரின் பெயர் இருப்பதை உறுதிப்படுத்தி, இரண்டு வாக்காளர் அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்று போலியாக இருக்கலாம் என்றும் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த சூழ்நிலையில், பீஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹாவுக்கும் புகைப்படத்துடன் கூடிய இரண்டு வாக்காளர் அட்டைகள் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் ஆன்லைன் பதிவில் விஜய்குமார் சின்ஹா இரண்டு இடங்களில் வாக்காளராக உள்ளார். ஒரு இடத்தில் வயது 57 என்றும், மற்றொரு இடத்தில் 60 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு ஓட்டுகளும் வேறு தொகுதிகளில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய வாக்காளர் பட்டியல் மாவட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்படியான முரண்பாடு ஏன் வருகிறது என மக்கள் அறிய வேண்டியது அவசியம் என தேஜஸ்வி வலியுறுத்தினார். இது தேர்தல் ஆணையத்தின் பட்டியல் தவறானதாக இருக்கலாம் அல்லது துணை முதல்வர் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என அவர் சந்தேகித்தார். இதன்மூலம் தேர்தல் முறைகேடு குறித்து மக்கள் முன் விளக்கம் தரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேஜஸ்வியின் குற்றச்சாட்டுக்கு துணை முதல்வர் விஜய் சின்ஹா மறுப்பு தெரிவித்தார். இரண்டு இடங்களில் பெயர் இருப்பது உண்மையென ஏற்றுக்கொண்ட அவர், அவற்றில் ஒன்றை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், தேவையான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறினார். மேலும், தாம் எப்போதும் ஒரு இடத்தில் மட்டுமே வாக்களிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.