நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் அதே வேளையில், திறன் சார்ந்த துறைகளில் பணியாளர்களின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், ஒரு புறம் வேலையில்லை என்று இளைஞர்கள் கூறிக் கொண்டாலும், மறுபுறம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூவி கூவி அழைக்கும் நிலைதான் இருக்கிறது. எனவே, இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் சூப்பர் திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 20 லட்சம் இளைஞர்கள் வீதம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்றும், ஓராண்டு கால இப்பயிற்சியின் மூலம் நவீன வணிக சூழல், உற்பத்தி திறன் மற்றும் வேலை அனுபவத்தை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
பயிற்சி காலத்தில் ஒருமுறை ஊக்கத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவதோடு, மாதந்தோறும் தலா ரூ.5,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டச் செலவிற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் 10 சதவீதத்தை பெரு நிறுவனங்கள் தங்களது கார்ப்பரேட் சமூக பங்களிப்பு (CSR) நிதியில் இருந்து வழங்கும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,000க்கும் மேற்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தங்கும் விடுதிகளும், குழந்தைகள் பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.