புதுடில்லி: பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் விதமாக, பிட் இந்தியா இயக்கத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். டில்லியில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

பிரதமர் மோடியின் பிட் இந்தியா மற்றும் சுதேசி மந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இன்று பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 8,000க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இது மக்கள் மனதில் சுயநிறைவு மற்றும் நாட்டுப்பற்று பற்றிய எண்ணங்களை வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.
அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது உரையில், “சைக்கிள்கள் மீது இருந்த ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், உடல் நலனும், நாட்டின் முன்னேற்றமும் சைக்கிள் பயணத்தின் மூலம் அடையலாம்” என தெரிவித்தார்.
பிட் இந்தியா இயக்கம், நாட்டின் சுயநிறைவு கனவை நனவாக்கும் முக்கிய அங்கமாக இருக்கும் என்றும், இதனை மக்களிடையே பரப்புவது அரசின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். அனைவரும் ஒருங்கிணைந்து முன்னேறினால், இந்தியா உலகின் முன்னணி நாடாக உயர்ந்திடும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.