புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது வயது மற்றும் இடஒதுக்கீடு சான்றிதழ்களை இணைக்க வேண்டியது கட்டாயம் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விதிகள் மாற்றப்பட்டு கடந்த 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புகளின்படி, சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் வயது மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே அத்தகைய ஆவணங்களை பதிவேற்ற முடியும். தற்போது முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோசடி புகாரில் சிக்கிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் விவகாரத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்படாவிட்டால், தேர்வுக்கான விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு மே 25, 2025 அன்று நடைபெறும்.
தேர்வின் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை தோராயமாக 979 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 38 காலியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பிப்.,11 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.