இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு நாளை முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நீண்டகாலமாக நட்பு மற்றும் வர்த்தக உறவு பேணப்பட்டு வந்தாலும், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் கடுமையான வரி மற்றும் வர்த்தகத் தடைகளை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு பின்னணி, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கிய இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் தோல்வியாகும். விவசாயம், பால், மற்றும் சிறுகுறு தொழில் துறைகளில் ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், டிரம்ப் 20 முதல் 25% வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். தற்போது அந்த எச்சரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களும் கச்சா எண்ணெயும் அதிகளவில் வாங்கும் நிலையில், ரஷ்யா மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைகளை மீறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தீர்மானம் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். செல்போன்கள், ஜவுளி, மருந்துப் பொருட்கள், வைரம், வாகன உதிரிப்பாகங்கள் ஆகியவைகளின் விலை உயர வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தோல், கிரானைட் போன்ற பொருட்களின் ஏற்றுமதியிலும் பின்விளைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது இந்திய ஏற்றுமதித் தொழிலாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் நெருக்கடியாக இருக்கலாம்.
இந்திய அரசு மத்திய வர்த்தகத்துறை மற்றும் வெளியுறவுத்துறையின் வழியாக வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. இருநாடுகளுக்கும் நன்மை தரும் சமநிலையிலான தீர்வு தேவை என அரசு தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த வார இறுதிக்குள் தீர்வும் வந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.