America First கொள்கையின் கீழ் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கை இந்தியாவின் சுமார் 55% ஏற்றுமதி பொருட்களை நேரடியாக பாதிக்கிறது. இதில் கடல் உணவுகள், வாகன உதிரி பாகங்கள், மெத்தைகள், படுக்கை விரிப்புகள் போன்றவை அடங்கும். எனினும், மருந்துகள், சில எலெக்ட்ரானிக் பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் 50% வரி, இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், அமெரிக்க வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்கு 5% முதல் 25% வரை விலை சலுகை வழங்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே வரி விதிப்புக்கு முன்பே பெரும்பாலான சரக்குகள் அனுப்பப்பட்டிருந்தாலும், புதிய ஒப்பந்தங்களில் அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது.
இதனால், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மாதந்தோறும் ₹1,300 கோடி முதல் ₹1,500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்படுகிறது. தேசிய அளவில் இந்த இழப்பு ₹4,000 கோடி முதல் ₹4,200 கோடி வரை இருக்கும்.
இந்தியாவை விட குறைவான வரிவிதிப்பை எதிர்கொள்கிற வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்க சந்தையில் அதிக வாய்ப்பு உருவாகி வருவதாக உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.