மகாராஷ்டிரா: டெட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தை தொடர்ந்து உ.பி.யும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆசியர்களை ஒருபோதும் அரசு கைவிடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அத்துடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடீவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து உத்தர பிரதேச மாநில அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், “மாநில ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அவ்வப்போது அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களின் தகுதிகள் மற்றும் பல ஆண்டு சேவையைப் புறக்கணிப்பது நியாயப்படுத்தப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.