ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, கிஷ்த்வாரில் ராணுவ சீருடைகள் விற்பனை மற்றும் பதுக்கி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிஷ்த்வார் துணை கமிஷனர் ராஜேஷ்குமார் ஷவான் வெளியிட்டுள்ள உத்தரவில், “பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், நாசகார சக்திகள் முயற்சி செய்கின்றன.
இந்த ஆபத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்றார். இதன் ஒரு பகுதியாக கிஷ்த்வாரில் ராணுவ சீருடைகளை தைக்கவும், விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ மற்றும் போர் சீருடைகளை வாங்கும் மற்றும் விற்கும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் தங்கள் அங்கீகாரம் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு டீலரும் ராணுவ மற்றும் போலீஸ் சீருடைகள் விற்பனை குறித்த முறையான பதிவேட்டை பராமரிக்க வேண்டும். ராணுவ சீருடைகளை வாங்குபவர்களின் அடையாளத்தை டீலர்கள் சரிபார்க்க வேண்டும். போர்ச் சீருடைகள் ஆயுதப்படைகளின் உண்மையான உறுப்பினர்களுக்கு மட்டுமே விற்கப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். பதிவேடுகளை ஆய்வு செய்யும் அதிகாரம் தாசில்தார், மாஜிஸ்திரேட், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கு மேல் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
உத்தரவை மீறும் எந்தவொரு நபரும் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சந்தேகம் வராத வகையில் ராணுவ சீருடை அணிந்து 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதன் காரணமாக இராணுவ சீருடை விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.