பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. மாகி பௌர்ணமி தினம் அதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கும்பமேளா மண்டலத்தில் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளா விழாவில் புனித நீராடுவதற்காக பிரயாக்ராஜ் நகருக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதனால் நேற்று பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளில் சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது வாகனங்களை வழியில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும் என காவல் துறை அறிவித்துள்ளது. மேலும், கும்பமேளா மண்டலம் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “போக்குவரத்து நெரிசலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதுதான் காரணம். அனைத்து பணிகளும் முறையாகவும், திட்டமிட்ட முறையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், எதிர்பார்த்ததை விட மக்கள் வருகை அதிகரித்ததே இதற்குக் காரணம்” என்று உத்தரப்பிரதேச டிஜிபி பிரசாந்த் குமார் கூறினார். ‘கல்ப்வாஸ்’ எனப்படும் ஒரு மாத கால விரதத்தை கடைப்பிடித்து வந்த பக்தர்கள், தற்போது மாகி பௌர்ணமியை முன்னிட்டு கும்பமேளாவுக்கு வருகை தருவதால் கும்பமேளாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜ் ரயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும். ரயில் நிலையம் மூடப்படுவதாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.