நைனிடால்: உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் நடைபெற்ற பல்கலைக்கழக விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் குமாவோன் பல்கலையில் நடந்த பொன்விழா ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். விழாவில் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றியதுடன், மேடையில் இருந்து இறங்கிய பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மேடையில் இருந்து வெளியேறியதும், முன்னாள் எம்.பி. மகேந்திர சிங் பாலை கூட்டத்தில் கண்டதும், இருவருக்கும் இடையே சந்திப்பு நிகழ்ந்தது. நெருங்கிய நண்பராக இருந்த மகேந்திர சிங்கை பார்த்ததில் உணர்ச்சிவயப்பட்ட துணை ஜனாதிபதி, அவரை கட்டியணைத்தபோது திடீரென மயங்கி அவருடைய தோளில் சாய்ந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்ததால் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்தில் இருந்த மருத்துவக் குழு உடனடியாக அதிவேகமாக செயல்பட்டு முதலுதவி வழங்கியது. சிறிது நேரத்தில் அவர் நிலைமை சீராகி, மயக்கம் தெளிந்ததால் பாதுகாப்பு குழுவினர் அவரை ராஜ் பவனுக்கு அழைத்துச் சென்றனர். அவரின் உடல்நிலை தற்போது சிறப்பாக இருப்பதாக அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், துணை ஜனாதிபதி விரைவில் இயல்புநிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து நிகழ்ச்சி அமைதியான முறையில் முடிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமான மருத்துவ அறிக்கை பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.