பீஹாரின் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நாளந்தா மாவட்டம் ஜோகிபூர் மாலவன் கிராமத்தில் கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியானார்கள். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஷரவண் குமார் சென்றார். அவருடன் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வும் காரில் சென்றிருந்தார்.
அமைச்சர் வந்தவுடன் கிராம மக்கள் அவரை சூழ்ந்து கேள்வி எழுப்பினர். “சம்பவம் நடந்தே இவ்வளவு நாளான பின் ஏன் வந்தீர்கள்? ஏன் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை?” என அவர்கள் கேட்டனர். இதனால் நிலைமை பதற்றமாக மாறியது. அதிருப்தி அடைந்த கிராம மக்கள் அமைச்சர் மற்றும் அரசியல்வாதிகளை விரட்டி துரத்தினர்.
அமைச்சரும் எம்.எல்.ஏ.வும் காரில் ஏறி தப்பினர். ஆனால் கோபமடைந்த மக்கள் அந்தக் கார்களை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி தாக்கினர். அதிர்ஷ்டவசமாக அமைச்சர் காயமின்றி தப்பினார். எனினும், அவரது பாதுகாவலர் தாக்குதலில் காயம் அடைந்தார். அவர் தற்போது ஹில்சா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் மாநில அரசுக்கு பெரும் அவமானமாக கருதப்படுகிறது. சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த குடும்பங்கள் தங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மாநில அரசின் செயல்பாடு குறித்து பொதுமக்களில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் பீஹாரின் அரசியல் சூழ்நிலையை மேலும் பதட்டமாக்கியுள்ளது.