டெல்லி: விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்துடன் நேற்று முறைப்படி இணைந்ததால், இன்று முதல் அனைத்து விமானங்களும் ஏர் இந்தியா பெயரில் இயங்கத் தொடங்கியுள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியது.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்துடன் முறைப்படி இணைக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்கள் ஏர் இந்தியாவாக இன்று முதல் பறக்கத் தொடங்கியுள்ளன. விஸ்தாராவின் கடைசி விமானம் நேற்று இரவு டெல்லியில் இருந்து மும்பை சென்றது.
இணைக்கப்பட்ட ஏர் இந்தியாவின் முதல் விமானம் தோஹாவிலிருந்து மும்பைக்கு இயக்கப்பட்டது. இணைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களுக்கு எண் 2-ல் தொடங்கி புதிய 4 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன. விஸ்தாரா விமானத்தின் நிறம் மற்றும் லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் ஏர் இந்தியா இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
இதற்கிடையில் ஏர் இந்தியா மற்றும் டாடா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை முன்னணி விமான நிறுவனங்களாக மாறின. டாடா தானே ஏர்லைன்ஸ், இண்டிகோவை பின்னுக்கு தள்ளி முன்னணி விமான நிறுவனமாக மாறியுள்ளது.