புதுடில்லி: பீஹாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் போது குடியிருப்பு மாற்றம், இறப்பு, இரட்டை பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதனால் பீஹார் அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சை கிளம்பியது.

எதிர்க்கட்சிகள், இந்த நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டின. ஆனால், இந்தியா டுடே – சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 58 சதவீத மக்கள் தேர்தல் ஆணையத்தின் முடிவை ஆதரித்துள்ளனர். மக்கள் வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் முயற்சி ஜனநாயகத்திற்கு தேவையான ஒன்று என்றும், உண்மையான வாக்குரிமையை காக்கும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், 17 சதவீத மக்கள் இந்த திருத்த நடவடிக்கை சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவே செய்யப்பட்டது என்று குற்றம்சாட்டினர். மேலும் 12 சதவீத மக்கள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பான்மை வாக்காளர்கள், இந்த நடவடிக்கைக்கு தங்களின் முழு ஆதரவை அளித்திருப்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
இந்த கருத்துக்கணிப்பு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 14 வரை நடத்தப்பட்டது. இதில் பீஹாரின் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் மொத்தம் 2,06,826 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட நடவடிக்கையை மக்கள் பெரும்பாலும் வரவேற்றுள்ளனர். அதேசமயம், இந்த விவகாரம் அடுத்த தேர்தலில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.