புதுடில்லி: பீஹாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற தீவிர திருத்தப் பணிகளுக்குப் பின்னர், இப்போது தலைநகர் டில்லியிலும் அதே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பில், வாக்காளர் பட்டியல்களின் நேர்மையை உறுதி செய்வதற்காகவும், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தை பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பீஹாரில் நடத்தப்பட்ட திருத்தப்பணிகளில், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இருமுறை பெயர் இடம் பெற்றவர்கள் என சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, போராட்டங்களிலும் ஈடுபட்டன. மேலும், இந்நடவடிக்கையை சவால் செய்து நீதிமன்றத்தையும் அணுகியுள்ளனர்.
இந்த சூழலில், தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் மாநில வாரியாக வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதற்கான முதல் கட்டமாக, டில்லியில் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டில்லி தலைமை தேர்தல் கமிஷனர் வெளியிட்ட தகவலில், பெயர் விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம், பட்டியலில் உள்ள தவறுகளைச் சீர்செய்வதோடு, விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த திருத்தம் முடிந்த பின், டில்லியில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மிகத் துல்லியமான மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியலின் கீழ் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.