வாக்குப்பதிவின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி மற்றும் புகைப்பட காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது, வாக்காளரின் தனியுரிமைக்கு எதிரானது என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜூன் 22) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்திருந்த அறிவுறுத்தலில், வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை 45 நாட்கள் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என்றும், அந்த காலப்பகுதியில் தேர்தல் முடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், அவற்றை அழிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையமே ஆதாரங்களை அழிக்கிறது” எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும், யார் வெற்றி பெற வேண்டும் என்பதை ஏற்கெனவே முடிவு செய்து நடத்தப்படும் தேர்தல், மக்களாட்சிக்கே எதிரானது என குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியிடப்படும் காட்சிகள், வாக்காளர்களின் ஓட்டுப் பதிவு சார்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், இதன் மூலம் அவர்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்படும் என்றும் விளக்கியுள்ளது.
அத்துடன், யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பதுபோன்ற விவரங்கள் வெளியானால், அரசியல் அழுத்தம், துன்புறுத்தல், பலவந்தம் போன்ற சம்பவங்கள் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாக்காளரின் பாதுகாப்பு, தனியுரிமை என்பது சுதந்திரமான தேர்தலின் அடிப்படை என்பதை நினைவுபடுத்திய தேர்தல் ஆணையம், நீதிமன்ற உத்தரவை தவிர எந்த சூழ்நிலையிலும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட மாட்டாது என உறுதி செய்துள்ளது.
இந்த முடிவை தேர்தல் ஆணையம் மக்களடையாக்கும் நடவடிக்கையாக சிலரும் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் இதை விமர்சனமாகவே பார்க்கின்றன.