புதன்கிழமை மக்களவையில் முக்கியமான வக்ஃப் சட்டத்திருத்த மசோதா குறித்து விவாதம் நடைபெறுகிறது. இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. வக்ஃப் திருத்த மசோதா என்றால் என்ன? இதன் வரலாறு என்ன? இப்போது நாம் அதனை அறிந்துகொள்வோம்.

வக்ஃப் (சட்டத்திருத்த) மசோதா 2024 இன் நோக்கம், வக்ஃப் சட்டம், 1995 இல் மாற்றங்களைச் செய்து, வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதாகும். இந்த மசோதா மூலம், இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முக்கியமாக, வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தில் எழும் பிரச்சனைகள், நிர்வாக அமைப்பின் வலுப்பாடு, வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டை திறம்படச் செய்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுக்கப்படுகிறது. மேலும், சட்டத்திற்கு புதிய பெயர் வைப்பதும், வக்ஃப் சொத்துக்களின் பதிவு செயல்முறையை எளிதாக்குவது, தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிப்பதும் இதில் அடங்கும்.
இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகம் வக்ஃப் சட்டம், 1995 இன் அடிப்படையில் நடைபெறுகிறது. இதில் மத்திய வக்ஃப் கவுன்சில் (CWC), மாநில வக்ஃப் வாரியங்கள் (SWBs), வக்ஃப் தீர்ப்பாயங்கள் ஆகிய மூன்று முக்கியமான அமைப்புகள் செயற்படுகின்றன. மத்திய வக்ஃப் கவுன்சில், அரசு மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களுக்கு கொள்கை சார்ந்த ஆலோசனைகளை வழங்குகிறது. மாநில வக்ஃப் வாரியங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது ஆகியவற்றில் பங்கு வகிக்கின்றன.
வக்ஃப் வாரியங்களின் நிர்வாகத்தில் சில பிரச்சனைகள் உள்ளன. “ஒருமுறை வக்ஃப் என்றால், என்றென்றும் வக்ஃப்” என்ற கோட்பாடு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சட்டரீதியான சர்ச்சைகள் மற்றும் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்துள்ளன. அதிலும், வக்ஃப் சட்டத்தின் தவறான பயன்பாடு, அரசியலமைப்பின் செல்லுபடி தன்மை குறித்த சந்தேகங்கள் மற்றும் அவசியமான ஆய்வுகளின் தாமதம் முக்கிய பிரச்சனைகளாகும்.
வக்ஃப் சட்டம், 1995 ஐ திருத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கம் மற்றும் பல தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த மசோதாவுக்கு முன், 2023-2024ம் நிதியாண்டில் பல முக்கிய கூட்டங்கள் நடந்தன. இதில், வக்ஃப் சட்டத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவது மற்றும் அதன் குறைபாடுகளை சரிசெய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
வக்ஃப் சட்ட திருத்த மசோதா, 2024 என்பது இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்த, அவற்றின் ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க, மேலும் திறம்பட செயல்படுத்துவது நோக்கமாகும்.