திருவனந்தபுரம்: புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவ தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகள் கரைபுரண்டு ஓடியது. ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
உணவு, குடிநீர், மீட்பு பணியை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்துக்கு ஆதரவு தெரிவித்து, எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில்; ஃபன்ஜால் புயலின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களிடம் எங்கள் எண்ணங்கள் உள்ளன.
இந்த சவாலான நேரத்தில் கேரளா தனது அண்டை மாநிலத்திற்கு துணை நிற்கிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கேரளா தயாராக உள்ளது. இதிலிருந்து ஒன்றாக மீண்டு வருவோம். இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.