புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் பத்ம விருதுகள் 2026-க்கான பரிந்துரை செயல்முறையை தொடங்கியுள்ளது. நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூகப் பணி, மருத்துவம், அறிவியல், வணிகம், பொது விவகாரங்கள், அரசுப் பணி, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜூலை 31. இவை ராஷ்ட்ரிய புரஸ்கார் போர்ட்டலில் (https://awards.gov.in) ஆன்லைனில் பெறப்படும் என்று அமைச்சகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனம், தொழில், தரம் அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களும் விருதுகளுக்குத் தகுதியானவர்கள்.
மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அரசு ஊழியர்கள் இந்த விருதுகளுக்குத் தகுதியற்றவர்கள்.