கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு வழக்கில், மாநில அமைச்சர் சந்திரநாத் சின்ஹா நேற்று கொல்கட்டா சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சராக உள்ள அவர் மீது, நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சின்ஹா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியபோதும், நீதிமன்றம் அதை ஏற்க மறுத்தது. இதற்கு பதிலாக, நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், கொல்கட்டாவை விட்டு வெளியேறக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், அடுத்தடுத்த விசாரணைகளுக்கு மீண்டும் நேரில் ஆஜராகும்படி புதிய சம்மன் அனுப்ப அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
இந்த வழக்கு, மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியில் முக்கியப் பதவியில் உள்ள ஒருவரின் சரணடைப்பு, திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கே சவாலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த வழக்கு தொடர்ச்சியாக எந்த அளவுக்கு பரபரப்பை உருவாக்கும் என்பதற்கு அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.