வெஸ்ட் நைல் வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி மக்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இத்தாலியின் லாசியோ பகுதியில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்தது அங்குள்ள 10வது மரணமாகும். இந்த வைரஸ் தற்போது ஐரோப்பாவின் ஐந்து நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ‘க்யூலெக்ஸ்’ என்ற வகை கொசுக்களின் கடியால் மனிதர்களுக்கு பரவுகிறது. முதலில் பறவைகளை கடிக்கும் இந்த கொசுகள், பின்னர் மனிதர்களையும் கடிக்கும்போது வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு அறிகுறிகள் தெரியாதிருந்தாலும், சிலருக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற எளிய அறிகுறிகள் தோன்றுகின்றன.
மிகக் கடுமையான சூழ்நிலைகளில் மூளை வீக்கம், நரம்பு மண்டல பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பெரும்பாலும் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாத இறுதியில் மட்டும் இத்தாலியில் 57 பேருக்கு வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது போன்ற பாதிப்புகளில் சுமார் 20% உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இத்தாலி, கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இது பரவியுள்ளதுடன், லத்தினா மாகாணத்தில் அதிகமாக 43 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த வைரஸுக்கு இதுவரை சிறப்பான சிகிச்சை இல்லை. அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் அதிக அபாயத்தில் உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொசு பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன. மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.