ஜாமியா மசூதிக்கு என்ன வண்ணம் தீட்டுவது என்பது தொடர்பாக உத்தரபிரதேசத்தின் சம்பல் குடியிருப்பாளர்களிடையே புதிய மோதல் தொடங்கியுள்ளது. இதில் முஸ்லிம் தரப்பு பச்சையும், இந்து தரப்பு காவியும், அரசு நிர்வாகம் வெள்ளையும் வலியுறுத்துகின்றன.
ஷாயி ஜாமியா மஸ்ஜித் 1526-ல் உ.பி., சம்பலில் கட்டி முடிக்கப்பட்டது. முகலாய பேரரசர் பாபரின் ஆட்சியின் போது கட்டப்பட்ட வட இந்தியாவில் முதல் மசூதியாக இது கருதப்படுகிறது. அங்குள்ள ஸ்ரீஹரி என்ற சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கில், மசூதியில் கள ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. நவம்பர் 24-ம் தேதி இந்த கள ஆய்வு நடந்த போது கலவரம் வெடித்து 6 பேர் இறந்தனர். இதையடுத்து கள ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த மசூதி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்காக வர்ணம் பூசப்படுவது வழக்கம்.

இதற்கு சம்பல் மசூதி கமிட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் அனுமதி கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மசூதி கமிட்டி மனு தாக்கல் செய்தது. இதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், மசூதியின் வெளிப்புறத்தில் மட்டும் வர்ணம் பூச இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டார்.
இந்நிலையில், எந்த நிறத்தில் பெயிண்ட் அடிப்பது என்பதில் புதிய மோதல் தொடங்கியுள்ளது. சம்பல் பள்ளிவாசலுக்கு வழக்கம் போல் பச்சை வண்ணம் பூச வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கோவிலை இடித்து கட்டப்பட்டதால், அதற்கு காவி வர்ணம் பூச வேண்டும் என இந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்தர் பன்சியா கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி மசூதிக்கு வர்ணம் பூசப்படுகிறது.
எனவே, நீதிமன்றத்தில் மனு செய்து உத்தரவு பெறுவதே சரியாக இருக்கும். பச்சை மற்றும் காவி நிறங்கள் இரண்டையும் பொதுவாக வெள்ளை வண்ணம் பூசலாம் என்று நீதிமன்றத்தில் கூறுவோம்” என்றார். இதற்கிடையில், சம்பலில் ஹோலி கொண்டாட்டங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் நேற்றுமுன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மசூதியில் வர்ணம் பூசப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ளது.அதற்கு முன்னதாக ஏப்ரல் 1-ம் தேதி ரம்ஜான் பண்டிகை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.