சென்னை: இந்துக்களுக்கு தனி நாடாக ‘கைலாச நாடு’ உருவாக்கப்படும் என சாமியார் நித்யானந்தா அறிவித்திருந்த நிலையில், அந்த நாடு அமையும் இடத்தை ஜூலை 21ம் தேதி அறிவிப்பேன் என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் காணாமல் போனார். கைலாசத் தீவுக்குச் சென்றதாக நித்யானந்தாவே கூறியிருந்தார். இந்துக்களுக்கான நாடாக மாற்றியுள்ளதாக அவரே கூறியிருந்தார். தங்களுக்கு தனி அரசு, தனி கொடி, பாஸ்போர்ட், கரன்சி என, நாட்டின் ஜனாதிபதி தான் என்று நித்யானந்தா அறிவித்தார்.
ஆனால் அந்த நாடு எங்குள்ளது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. அங்கிருந்து அவ்வப்போது வீடியோ மூலம் பிரசங்கம் செய்து தனது பிரத்யேக யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வந்தார். கைலாசம் அமையும் இடத்தை ஜூலை 21-ம் தேதி அறிவிப்பதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான அறிவிப்பு அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில், ‘கைலாசம் திறக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி குருபூர்ணிமா தினத்தன்று கைலாசம் இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ‘கைலாஷ் குடியிருப்பாளராக இப்போதே பதிவு செய்யுங்கள்’ என்ற ஆன்லைன் லிங்க் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விடை தெரியாத கைலாசா நாட்டின் முகவரி விரைவில் தெரியவரும்.