இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகும். இது வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யும் அடையாளமாகும். வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டும் தான் நீங்கள் வாக்களிக்க முடியும். எனவே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம். ஏதேனும் காரணத்தால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனில், அதை மீண்டும் சேர்க்கும் வாய்ப்பு உள்ளதோடு, இப்போது அதை ஆன்லைனிலும் செய்யலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையம் ஆன்லைன் மற்றும் நேரடி முறைகளில் இந்தச் சேவையை வழங்குகிறது. ஆன்லைனில் நீங்கள் முதலில் https://voters.eci.gov.in என்ற தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் தளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு ‘புகார் பதிவு’ அல்லது ‘பகிர்வு பரிந்துரை’ பகுதியில் உங்கள் புகாரைத் தெரிவிக்கலாம். புதிய கணக்கு தேவைப்பட்டால் உருவாக்கி, தேவையான விவரங்களை நிரப்பி, புகார் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
ஆஃப்லைன் முறையை விரும்புவோர், 1950 என்ற தேர்தல் ஆணையத்தின் உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் பகுதியின் பூத் லெவல் அதிகாரியிடம் (BLO) சென்று ஃபார்ம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதோடு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், முகவரி மற்றும் அடையாளச் சான்றிதழ்களும் தேவைப்படும். இதன்மூலம் உங்கள் பெயரை மீண்டும் பட்டியலில் சேர்க்க முடியும்.
முகவரி மாற்றங்கள் உள்ளவர்களுக்கு, பழைய பகுதியில் இருந்து உங்கள் பெயரை நீக்க ஃபார்ம் 7 பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு புதிய முகவரிக்கு உரிய ஆதாரங்கள் இணைத்து உங்கள் புதிய BLO-விடம் சமர்ப்பிக்கலாம். இவை அனைத்தும் சரியான முறையில் செய்தால், வாக்களிக்கும் உரிமையை மீண்டும் பெற முடியும்.