சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், இம்முறை பாஜக கூட்டணியின் பலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிந்து கட்சி அமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைகளும் உயர்மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசிய அளவில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பணிகள் பாஜகவில் நடைபெற்று வரும் நிலையில், அமித்ஷாவுடனான தமிழிசை சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சி தரப்பில் தேசிய அளவிலான பொறுப்பு தமிழிசைக்கு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் அரசியல் படிப்பதற்காக 12 பேரை பெல்லோஷிப் திட்டத்திற்கு அழைத்துள்ளது. அந்த 12 பேரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக அவர் 6 மாதங்கள் லண்டன் செல்கிறார்.
விசா நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், அவர் விரைவில் லண்டன் செல்லவுள்ளார். தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயக் வெளிநாட்டுப் பயணத்தின்போது கட்சியின் அமைப்புப் பணிகளை கவனிப்பார் என்றும், லண்டனில் இருந்தபடி அண்ணாமலை கட்சிப் பணிகளை கவனிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்கும் வரை 6 மாதங்களுக்கும் மேலாக பாஜக தலைவர் இல்லாமல் தமிழகம் ஓடியது குறிப்பிடத்தக்கது.