அமராவதி: தெலுங்கு தேசக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கான ‘ஸ்ரீ சக்தி’ என்று பெயரிடப்பட்ட இலவச அரசுப் பேருந்துப் பயணத் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் செயல்படுத்தப்படும். இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதன்படி, பல்ல வெலுகு, (நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு ஓடும் பேருந்துகள்), அல்ட்ரா பல்லவெலுகு, நகரப் பேருந்துகள், மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். இருப்பினும், திருமலைக்கும் திருப்பதிக்கும் இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் அரசுப் பேருந்துகளில் இந்தத் திட்டம் பொருந்தாது.

இதேபோல், இந்தத் திட்டம் நான்-ஸ்டாப் பேருந்துகள், அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் லக்சுரி, ஸ்டார் லைனர், ஏசி பேருந்துகளில் பொருந்தாது. நடத்துனர்களின் சட்டைகள் மற்றும் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச மாநில போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் காந்திலால் தாண்டே நேற்று புதிய உத்தரவை பிறப்பித்தார்.