கொலம்பியாவின் கார்டஜனா நகரில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் சுகாதாரம் தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் 2040ம் ஆண்டுக்குள் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோயின் பாதிப்புகளை 50 சதவீதம் குறைப்பதாக உறுதி அளித்தனர்.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குனர் ஆகாஷ் ஸ்ரீவத்சவா பேசியதாவது: “விரைவில் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் சுகாதார பாதிப்புகளை கணிசமாக குறைக்க இந்தியா உறுதி அளிக்கிறது. நோயின் பாதிப்புகளை சமாளிக்க தேவையான உதவிகளும் செய்யப்படும்.” என்று கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியா “சுத்தமான காற்று” என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக சமையல் செயற்கை எரிவாயு வழங்குவதன் மூலம், ஏழை மக்களுக்கு காற்று மாசுபாடு ஏற்படுத்தும் சுகாதார பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் பணிகளும், அதற்கான நோய் பரவலை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கான திட்டங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.