ஐதராபாத்: ஐதராபாத் புறநகர் ரயிலில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்பிக்க 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த 23 வயது பெண் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் புறநகர் பகுதியான மெட்சலில் வசித்து வருகிறார். தனது போனை ரிப்பேர் செய்யும் பொருட்டு கடந்த சனிக்கிழமை இரவு ஐதராபாத்துக்கு புறநகர் (MMTS) ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது இளைஞன் ஒருவன் ரெயிலில் பெண்ணை நெருங்கி தவறாக நடக்க முயன்றுள்ளான். அவரிடமிருந்து தப்பிக்க அப்பெண் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அப்பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது.
வழிப்போக்கர் ஒருவர் காயங்களுடன் கிடந்த பெண்ணை பார்த்தபின் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அப்பெண் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அத்துமீறிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.