சென்னை: முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்கான டிப்ஸ்தான்.
முதலில் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி மேல் நோக்கி துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும். முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.
அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது. மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.
ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது.