மாரடைப்பு என்பது உலகளவில் பலரை பாதிக்கும் உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசர நிலையாகும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே சில முக்கியமான அறிகுறிகள் வெளிப்படும். ஆய்வுகளில், 95% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் புதிய அல்லது வித்தியாசமான அறிகுறிகளை சந்தித்ததாக கூறியுள்ளனர். ஆனால், மாரடைப்பு வந்தபிறகு அவர்கள் அனுபவித்த அறிகுறிகள் மறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதலில், காரணமின்றி ஏற்படும் அசாதாரண சோர்வு பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். போதுமான ஓய்வு எடுத்தாலும், வழக்கமான செயல்பாடுகளில் கூட அதிக சோர்வு ஏற்படலாம். இதயத்திற்கான ரத்த ஓட்டம் குறையும் போது, உடல் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அதிக ஆற்றலை செலுத்தும், இது பெரும் சோர்வாக உணர செய்யும். மேலும், மார்பில் இறுக்கம், பாரம் அல்லது ஏதோ நெருக்கமான உணர்வு உருவாகும். சிலருக்கு முழுமையான வலியில்லாமல், சற்று தடுமாறும் உணர்வு மட்டும் இருக்கலாம்.
மனபதற்றம் மற்றும் ஊடுருவும் பயம் மாரடைப்பு முன்னோட்ட அறிகுறியாக இருக்கும். சில பெண்கள் எந்த காரணமும் இல்லாமல் அதிகம் பதட்டமடைந்து, பலசில நேரங்களில் திடீரென கவலையுடன் இருக்கிறார்கள். இது உடலின் உட்புற மாற்றங்களுக்கான ஒரு எச்சரிக்கை ஆக இருக்கலாம். சரியாக தூங்க முடியாமல் போவது, இரவில் பலமுறை விழித்தெழுவது மற்றும் தூக்கத்தில் ஏதோ தவறாக இருப்பதை உணர்வது கூட இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சு விடுவதில் தடை ஏற்படுவது முக்கியமான எச்சரிக்கையாகும். லேசான செயல்பாடுகளுக்கும் கூட மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதய செயல்பாடு பாதிக்கப்படும்போது, நுரையீரலில் திரவம் தேங்கலாம், இது சுவாசத்தை கடினமாக்கும். அதேசமயம், உடலின் கீழ் பாகங்களில், குறிப்பாக பாதங்களில் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் காணப்படலாம். இதய செயல்பாடு சரியாக நடக்காததால், உடலில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படலாம்.
இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி தொடர்ச்சியாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். லேசான என்று கருதப்படும் மாற்றங்களையும் கவனமாக பார்ப்பது மாரடைப்பு போன்ற பெரிய பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.