சென்னை: குழந்தைகளின் மென்மையான சருமம் சோப்பில் இருக்கும் இரசாயனத்தால் பாதிப்படைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, நம் முன்னோர்கள் பயன்படுத்திய குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
ரோஜா இதழ் – 100 கிராம், பாசிப்பயறு – 500 கிராம், வேப்பிலை – 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம், பாதாம் – சிறிதளவு, வெத்தி பூ (அ) இட்லி பூ – ஒரு கைப்பிடி அளவு, வெட்டி வேர் – ஒரு கைப்பிடி அளவு, ஆவாரம் பூ – 100 கிராம், பூலான் கிழங்கு – 50 கிராம், நெல்லிக்காய் பொடி – 50 கிராம், அதிமதுரம் – 50 கிராம், உலர்ந்த இஞ்சி (அ) சுக்கு – 25 கிராம், அரிசி – ஒரு கைப்பிடி அளவு, துளசி – 100 கிராம், ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் – 75 கிராம், மகிழம் பூ – 50 கிராம், செம்பருத்தி பூ – 100 கிராம், சந்தானம் (கட்டையாக) – 25 கிராம், கோரை கிழங்கு – 25 கிராம், கடலை மாவு
செய்முறை: மேற்கூறிய பொருட்களை நன்கு வெயிலில் உலர்த்தவும். பூ வகைகள் அனைத்தும் கைகளால் பிடித்தல், நொறுங்கும் படி நன்கு உலர வேண்டும். பின் இவற்றை அரைத்து மீண்டும் உலர வைத்து பத்திரப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
குறிப்பு: கடலை மாவு தேவைப்படும் போது தனியாக கலந்து கொள்ளுங்கள். கடலை மாவு சேர்த்தால் விரைவில் பூச்சி மற்றும் வண்டுகளும் பாதிக்கப்படும். அவற்றை அதன் பின் பயன்படுத்த முடியாது.
குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை உபயோகித்து மசாஜ் செய்து பின் இந்த பொடியை கொண்டு குளிக்க வையுங்கள்.
குழந்தையை குளிக்க வைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னால், இந்த பொடியை தண்ணீர், தயிர் அல்லது பால் கலந்து வைத்து பின் குளிக்க வையுங்கள். மேற்கூறிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றால், நாட்டு மருந்து கடைகளில் பொடியாக வாங்கி உபயோகிக்கலாம். இதில் கிடைக்காத சில பொருட்களை தவிர்த்து மற்றவைகளை கொண்டும் தயாரிக்கலாம்.