சென்னை: பூக்களில் எல்லோருக்கும் பிடித்தது ரோஜாதான். ரோஜா பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர் தான் இன்று முதன் முதலில் சருமத்துக்கான அழகு பராமரிப்பில் முதலாவதாக சேர்க்கப்படுகிறது. இந்த ரோஜா இதழ்களை கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் கூட சரும பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
எல்லா வயதினருக்கும் ஏற்ற சரும பராமரிப்பு என்றால் ரோஸ் பேக் சிறந்த தீர்வாக இருக்கும். அது மட்டுமா முகத்தில் கூடுதல் ஜொலிஜொலிப்பும் பளபளப்பும் மினுமினுப்பும் உங்களை தேவதையாக்கி காட்டும். ரோஜா இதழ்களை கொண்டு எந்த சருமத்துக்கு என்ன மாதிரியான பேக் போடலாம் என்று தெரிந்துகொள்வோம்.
ரோஜா இதழ்களில் ஆன்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் பி, சி, கே போன்றவை நிறைந்திருக்கிறது.இதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் தெளிவான சருமம் கிடைக்கும். ரோஜா இதழ்களில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை சருமத்துக்கு அதிக நன்மையை தரக்கூடும்.
நீங்கள் கவனிக்க வேண்டியது ஒன்று தான். அதிகம் இரசாயனம் தெளிக்கப்பட்ட ரோஜா இதழ்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இப்போது எப்படி ரோஜா இதழ்களை முகத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.
முகத்தில் கறை, கருமையான புள்ளிகள் இருப்பவர்களுக்கு இது சிறந்த பேக் போன்று இருக்கும். கூடுதலாக இவை சருமத்தில் இறந்த செல்களை நீக்கி தெளிவான முகத்தை அளிக்கிறது. சருமத்தை ஒளிரசெய்கிறது.
தேவையானவை
ரோஜா இதழ்கள் – 15
சந்தனத்தூள் – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
பன்னீர் – சில துளிகள்
ரோஜா இதழ்களை பன்னீர் துளி சேர்த்து மைய அரைக்கவும். இதனுடன் தேன், சந்தனத்தூள் சேர்த்து மைய சேர்த்து பேக் ஆக்கவும். பிறகு முகத்தில் தடவி எடுக்கவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.
வாரம் ஒரு நாள் இதை செய்து வந்தாலே ஒளிரும் முகத்தை பெறலாம். முகத்தை கறை இல்லாமல் வைத்திருக்கலாம்.