நகங்களை நீளமாக வளர்த்து, உங்களுக்கு விருப்பமான நிறத்தில் வண்ணம் தீட்டுவது பல இளம் பெண்களின் விருப்பமாகும். சிலருக்கு அவ்வப்போது நகங்கள் உடையும் வருத்தம் இருக்கும். சில வழிமுறைகளைப் பின்பற்றினால், நீண்ட நகங்களை எளிதாகப் பராமரித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம். உங்கள் நகங்களை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு கலக்கவும்.
அதில் உங்கள் நகங்களை 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், உங்கள் நகங்களில் உள்ள அழுக்குகளை அகற்றி அவற்றை பளபளப்பாக மாற்ற பிரஷ் மூலம் மெதுவாக தேய்க்கவும். தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு, நகங்களை வலுப்படுத்தும் குணம் கொண்டது. ஒரு பல் பூண்டு எடுத்து, வெளிப்புற தோலை நீக்கி, நுனியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டின் ஒட்டும் பக்கத்தை நன்றாக தேய்த்து நகங்களில் மசாஜ் செய்யவும்.

20 நிமிடம் கழித்து கைகளை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் இருப்பதுடன், வலுவாகவும் இருக்கும். அதேபோல், உங்கள் நகங்கள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை நகங்களை சுற்றி தடவலாம். உங்கள் நகங்களை ஆலிவ் எண்ணெயால் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால், உங்கள் நகங்களின் வேர்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இது உங்கள் நகங்கள் சீராக வளர உதவும். உங்கள் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகப் படுக்கைகளில் ஏற்படும் ‘நக பூஞ்சை’ போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும். எலுமிச்சையை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதைக் கொண்டு உங்கள் நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். கெமிக்கல் நிறைந்த நெயில் பாலிஷ் ரிமூவர்ஸ் நகங்களின் வளர்ச்சியைக் குறைத்து, வலிமையை இழந்து எளிதில் உடையும்.
இயற்கையான முறையில் நெயில் பாலிஷை நீக்குவது உங்கள் நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். புரதம் நிறைந்த உணவுகளை உண்பது உங்கள் நகங்களை வலுப்படுத்தும். இதற்கு பால், முட்டை போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.