சென்னை: பண்டிகை நாட்கள் என்றாலே புத்தாடை அணிந்து, மனம் நிறைய மகிழ்ச்சியுடனும், வாய் நிறைய சிரிப்புடனும், பளபளப்பான பொலிவுள்ள முகத்துடனும் இருக்க வேண்டும் என்பது பெண்களுக்கே உரிய ஆசைகளில் ஒன்று. குறிப்பாக, தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பலரும் புத்தாடை எடுப்பது,
அதற்கேற்ற ஆபரணங்களை வாங்குவது போன்ற சிந்தனையில் சூழ்ந்திருக்கலாம். நீங்களும் அப்படித்தானா? அப்படியானால், வண்ண வண்ண ஆடைகளுடன் உங்களது சருமமும் ஜொலிக்க இப்போதே சரும பராமரிப்பை தொடங்குங்கள். முகத்தை சுத்தம் செய்வது முதல் ஃபேஷியல் வரை சரும பராமரிப்பிற்கான வழிகள்.
சுத்தப்படுத்துதல்: ஆரோக்கியமான சருமத்திற்கு அடிப்படையான விஷயம் சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது தான். அதற்கு சருமத்திற்கு ஏற்ற குறிப்பாக, சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாத, அழுக்கு, எண்ணெயை நீக்க ஏற்ற, சல்பேட் இல்லாத (sulphate-free) மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை இருவேளை சுத்தம் செய்வது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான தோல் தடுப்பை (skin barrier) பராமரிக்க உதவுகிறது.
எக்ஸ்பாலியேட்: எக்ஸ்பாலியேட் என்பது ஸ்க்ரப் போன்றவற்றை பயன்படுத்தி இறந்த செல்களை நீக்கி செல் புதுப்பிப்பை ஊக்குவித்து புத்துணர்ச்சியூட்டி, ஒளிரும் சருமத்தை வெளிப்படுத்துவது. AHAs அல்லது BHAs கொண்ட மென்மையான ஸ்க்ரப் அல்லது கெமிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட்டை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவது சிறந்தது. இதனை அடிக்கடி பயன்படுத்துவது உணர்திறன் சரும கொண்டவர்களுக்கு சருமத்தை எரிச்சலூட்டும்.
நீரேற்றம்: சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது மிக முக்கியம். பகலில் லேசான, துளைகளை அடைக்காத (non-comedogenic) மாய்ஸ்சரைசரையும், இரவில் அதிக அடர்த்தியான கிரீமையும் பயன்படுத்தி ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும். சருமத்தின் நீர்ச்சத்தை அதிகரிக்க ஹைட்ரேட்டிங் சீரம் (hydrating serums) அல்லது இயற்கை எண்ணெய்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சரியான நீர்ச்சத்து வளர்ச்சிதை மாற்றம், செரிமானம் ஆகியவற்றை ஆதரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான பொலிவைப் பராமரிக்க உதவுகிறது.
சன்ஸ்கிரீன்: நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்தாலும், புற ஊதா கதிர்கள் (UV rays) சருமத்தை சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. முன்கூட்டிய வயதான தோற்றம் மற்றும் நிறமியிலிருந்து (pigmentation) பாதுகாக்க, SPF 30 அல்லது அதற்கு அதிகமாக உள்ள பிராட்-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது பொலிவான சருமத்தை பராமரிக்க அவசியமானது.
வைட்டமின் சி சீரம்: வைட்டமின் சி சருமத்தைப் பிரகாசமாக்கும் மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். காலை சரும பராமரிப்பில், வைட்டமின் சி சீரத்தைப் பயன்படுத்துவது பொலிவை மேம்படுத்துகிறது மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பான பொலிவை கொடுக்கிறது.