சென்னை: செல்லுலைட் என்பது உங்கள் இடுப்பு, பின்பாகம் மற்றும் தொடைகளில் காணப்படும் கொழுப்புகள் தேங்குவதால் உண்டாகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத பெண்கள் இந்த செல்லுலைட் பிரச்சனையால் பாதிப்படைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களை விட பெண்கள் தொடை பகுதியில் அதிக கொழுப்பை கொண்டு இருப்பதால் அவர்களுக்கு செல்லுலைட் பிரச்சனை அதிகமாக வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் காணப்படும் இணைப்புத் திசுக்கள் கூட ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பலவீனமானதாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த செல்லுலைட் ஆண்களையும் பாதிக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 10 சதவீத ஆண்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் செல்லுலைட் ஏற்பட வழிவகுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு வயதாகும் போது ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைகிறது. மோசமான இரத்த ஓட்ட சுழற்சி, கொலாஜன் உற்பத்தியில் குறைவு மற்றும் பழைய இணைப்பு திசுக்களின் முறிவும் இதற்கு காரணமாக அமைகின்றன.
வெலாஷேப் III மற்றும் பிற லேசர் சிகிச்சைகள் செல்லுலைட்டை சரி செய்ய உதவுகிறது. ஆனால் இது ஒரு குறுகிய கால பயனை மட்டுமே தரும். இந்த லேசர் சிகிச்சை கூட நிரந்தர தீர்வை தர வாய்ப்பில்லை.
நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்கும் போது அது கொழுப்பை குறைக்கிறது. மேலும் உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைக்க முடியும். இணைப்புத் திசுக்களை வலுவாக வைக்கும் உணவுகளான முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் மிளகாய் போன்றவற்றை சேருங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனால் உங்க சருமம் நீர்ச்சத்துடன் ஈரப்பதத்துடன் இருக்கும்.